புசல்லாவை நகரிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர், புசல்லாவை பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒரு தொகுதியும், 5 லட்சத்து 94 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புசல்லாவை, நகர் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவுவேளையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரியர் சேவையில் இருந்து வந்துள்ளோம் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்த இருவரே இந்த கொள்ளைச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
வர்த்தகரையும், அவரின் மகளையும் கட்டிவைத்துவிட்டு, ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடை நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிசிரிவி கமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
இதன்அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் ஹட்டன், நோர்வூட் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.அவர் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவரென்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










