புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குரிய நடவடிக்கையின்போதே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் முன்னெடுக்கப்படும்.
அரசமைப்பு மறுசீரமைப்பின்போதே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
புதிய அரசாங்கம் பதவிக்குவந்து 10 மாதங்கள்கூட ஆகவில்லை. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டும். அதற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சர்வதேசத்தின் நம்பிக்கை பெறப்பட்டுவருகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் பதவி விலகிய பின்னரும் அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளும், இம்முறையை தொடர்பில் அதிருப்தி உருவாவதற்கு பிரதான காரணங்களுள் ஒன்றாகும். அவ்வாறான சிறப்புரிமைகள் நீக்கப்படும். இதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.
