புதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு – பதவி துறந்தார் முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Paid Ad