புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்

எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள்.
விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை.
புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்.
கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை நேரடியாக சந்தித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், வேலு குமார் எம்பி, உதய குமார் எம்பி ஆகியோர் வலியுறுத்து.
பிரதி பொலிஸ் மாஅதிபரிடம், தமுகூ எம்பிக்கள் மேலும் கூறியதாவது,
“இது தமிழ், முஸ்லிம். சிங்கள இனப்பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை.”
“மரணமான இஷாலினியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் மேலதிக விபரங்களை இந்த புதிய பொலிஸ் குழு கண்டு பிடித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.”
“வீட்டுப்பணியில் ஈடுபட இஷாலினியின் வயது உகந்ததா? அவரது மரணம் ஏன் சம்பவித்தது? தற்கொலை என பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய எப்படி அதற்குள் முடிவுக்கு வந்தார்?”
“அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதற்கான காரணம் என்ன? அவர் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் நடைமுறைக்கு அவர் உள்ளாக்கப்பட்டாரா?”
“அவர் பணியில் இருந்த இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாக்குமூல, விசாரணை விபரங்கள் என்ன? அவர்கள் அனைவரும் முழுமையாக விசாரிக்கப்பட்டனரா? இஷாலினிக்கும், அவர் வசித்த வீட்டு உறுப்பினர்களுக்கும்
இடையில், இவரது தொழிலை தவிர வேறு உறவுகள் இருந்தனவா?”
“நெருப்புக்காக பயன்படுத்தப்பட்ட லைட்டர் எவருடையது? மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறும் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய, தற்கொலை செய்து கொள்பவர் இயல்பாக தலையில் மண்ணெண்னையை ஊற்றிக்கொள்ளாமல், ஏன் தனது காலில் ஊற்றிக்கொண்டார் என்பதற்கு தரும் விளக்கம் என்ன?”
இக்கேள்விகளுக்கான விடைகளை பொலிஸ் விசாரணை குழு கூடிய விரைவில் நாட்டுக்கு பெற்றுத்தர வேண்டும்.”
“குற்றம் நிகழ்ந்து இருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்கள ஆலோசனை பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் நாம் கண்காணிப்போம்.”

Related Articles

Latest Articles