புத்தாண்டை பிள்ளைகளுடன் கொண்டாட நினைத்த தந்தைக்கு நேர்ந்த சோகம்

களுத்துறையில் புத்தாண்டுக்காக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க சென்ற போது தனது சட்டை பையில் இருந்த 80,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து பதுரலிய – பில்லவலகட பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவகமுவ, பொமிரிய பிரதேசத்தில் உள்ள கல் ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர், உரிமையாளர் சம்பளமாக வழங்கிய 35,000 ரூபாவையும், தான் சேகரித்த பணத்துடன் 80,000 ரூபாவை எடுத்துக் கொண்டு நேற்று காலை பதுரலிய பகுதிக்கு சென்றுள்ளார்.

அவர், புத்தாண்டை தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் அவர் அணிந்திருந்த சட்டையின் மேல் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராண்ட்பாஸ் பகுதியில் பணம் காணாமல் போயுள்ளது.

இதனால் அவர் வீட்டுக்குச் செல்லாமல் மீண்டும் கல் ஆலைக்குத் திரும்பியதாகவும், பணத்தை தேடியும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு கல் ஆலை அருகே உள்ள வழக்கமான தங்கும் அறையில் தங்கியிருந்த அவர், இன்று காலை நண்பர் ஒருவர் அவரைத் தேடிச் சென்ற போது மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொள்வதுடன், நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Latest Articles