நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றில் அமைந்துள்ள நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயம், வெளியாகியுள்ள 2025க்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 60 மாணவர்களில் 12 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம், நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றில் அதிகூடிய சித்தி வீதத்தைப் பெற்று இப் பாடசாலை முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் உச்சமாக, மாணவன் கே. யதீஷ் 155 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பி. வருணி (152) மற்றும் எஸ். சிபோனா ஸ்ரெப்னி (150) ஆகியோரும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். மேலும், ஜி. திவ்யேஷ் (146), பி. நிதீஷ் (143), எஸ். சக்ஷன் (139), கே. லக்ஷயன் (138), டி. சாயன்யா (138), எம். தர்ஷந்தன் (136), பி. ஹரிகேஷ் (134), கே. அர்ஜுன் பிரபாகரன் (133), மற்றும் எஸ். விதுர்ஷிகா (133) ஆகியோரும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
பாடசாலையின் இந்த மகத்தான வெற்றிக்கு, அதிபர் கிருஸ்ணகுமார் தலைமையிலான நிர்வாகத்தினரும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய வகுப்பு ஆசிரியர்களான ஆசிரியர் திரு. ஜி. தர்மராஜனிகாந்த் மற்றும் ஆசிரியை. ஜி. ஸ்டெல்லா ஆகியோரும், பகுதித் தலைவர் ஆசிரியை. பி. யோகமலர் அவர்களும் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றனர்.
மாணவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு, மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான வழிகாட்டுதலே இந்த வரலாற்றுச் சாதனைக்கு வழி வகுத்துள்ளது.
கடந்த காலங்களிலும் மெராயா பாடசாலை பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த முன்னடைவை காட்டி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வெற்றி, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக அமைவதுடன், அர்பணிப்பு மிக்க கல்வி சேவையின் மூலம் தரம் வாய்ந்த கல்வியை வழங்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
ராசையா கவிஷான்