” பெண் தொழிலாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தோட்டக் கம்பனிகள்”

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களைப் போலவே சம சம்பளம் பெற்று வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அவர்களது வேலைப்பளுவை அதிகரித்து உளவியல் ரீதியான அழுத்தங்களை பெண் தொழிலாளர்கள் மீது பிரயோகித்து வருவதாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம்  குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1951ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தனது சர்வதேச பொது மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற பொது தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் சுமார் 42 வருடங்கள் கழித்து 1993 இல் இங்கு அமுல்படுத்தியது.

இதன் பயனாக 1993 ஏப்ரல் மாதம் தொடக்கம் தோட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தின சம்பளமான 23 ரூபா 78 சதம் அடிப்படை சம்பளமாகவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் விலைக்கேற்ப கொடுப்பனவு என்பனவும் சேர்த்து பெண் தொழிலாளர்களுக்கும் சம சம்பளமாக வழங்கப்பட்டு வந்தன.

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகளுக்கு ஏற்ப பெண் தொழிலாளர்கள் இன்றும் சம சம்பளத்தை பெற்று வருகின்றனர். பெண் தொழிலாளர்கள் சம சம்பளத்தை பெற்று வந்தாலும் கம்பனி நிர்வாகங்கள் இத் தொழிலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்த சம்பள அதிகரிப்பிற்கேற்ப ஒரு நாட் பேருக்கு 14 கிலோகிராம் கொழுந்தை பறிக்க நிர்ப்பந்தித்து, தற்போது ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பின்னர் 20 கிலோகிராமிற்கு மேலதிகமாக கொழுந்தை பறிக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வறட்சி நிலவும் காலங்களில் இது சாத்தியமற்ற விடயமாகும். இதனால் பெண் தொழிலாளர்கள் தாம் தொழில் புரியும் இடங்களில் பாரிய மன அழுத்தங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

தவிர,ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும். எனினும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு பறிக்கும் கொழுந்து கிலோகிராம் அளவிற்கு ஏற்பவும், சேகரிக்கும் இறப்பர் பால் லீற்றருக்கு ஏற்பவும் கொடுப்பனவுகளை வழங்கும் முறையை நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன. இது சம்பளமாக இல்லாமல் கைக்காசு முறையில் வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக தொழிலாளர்கள் இக் கொடுப்பனவிற்கான ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி அறவிடூகளை இழந்துள்ளனர்.இந்நாட்களில் இவர்களது தொழில் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசாங்கம், அரச நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் ஊழியர்களை பாதுகாக்க விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

து போன்ற நடைமுறையை தனியார் துறை பெண் கர்ப்பிணி தொழிலாளர்களும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக மலையக பெண் தொழிலாளர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.என இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு விரைந்து கவனம் செலுத்த வேண்டும், அத்தோடு பெண் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles