‘பெருந்தோட்ட அமைச்சும், கம்பனிகளும் இணைந்து நிவாரணம் வழங்க வேண்டும்’

“ அரசாங்கத்தின் நிவாரணப் பொறிமுறைக்குள் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் உள்வாங்கப்படாமல், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலைமை தொடரக்கூடாது. எனவே. எமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும், பெருந்தோட்டக் கம்பனிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவரால்  விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது மற்றும் 2ஆவது அலைகளின்போதும் நாடு முடக்கப்பட்டது. அவ்வாறு முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குறைந்தவருமானம் பெறுபவர்களுக்கும் அரசாங்கத்தால் 5 ஆயிரம் ரூபா நிதி நிவாரணம் வழங்கப்பட்டது. குறித்த நிவாரணத் திட்டத்தில் பல குளறுபடிகள் காணப்பட்டதுடன், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை.

நகரங்கள் மற்றும் கிராமங்களைத்தாண்டி நிதி நிவாரணம் தோட்டப்பகுதிகளுக்கு வரவில்லை எனக்கூறுவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனால் பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

3 ஆவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போதும் நாடு முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. தூர நோக்கு சிந்தனை இன்மையாலும், முறையற்ற முகாமைத்துவத்தாலும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இதனால் வழியின்றி திண்டாடும் இந்த அரசாங்கம், நாட்டு மக்களையும் முழுமையாக கைவிட்டுள்ளது. “மக்கள் தியாகம் செய்ய வேண்டும், நாங்கள் ஒன்றும் வழங்கமாட்டோம்.” என்ற தொனியிலேயே ஜனாதிபதியின் உரைகூட அமைந்தது.

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடந்த காலங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.

ஆயிரம் ரூபாகூட முறையாக வழங்கப்படவில்லை. அதேபோல பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்கு சென்றிருந்தவர்களும் தொழில் இழந்து வீடுகளுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கமானது இதில் மேலும் தாக்கத்தை செலுத்தும்.

எனவே, நெருக்கடியான கட்டங்களில் எல்லாம் இந்நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து, வருமானம் உழைத்துக்கொடுத்த பெருந்தோட்ட மக்களை பாதுகாக்கும் பொறுப்பு பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இருக்கின்றன.

இவ்விரு தரப்புகளும் இணைந்து விசேட நிவாரணத் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான அவசர பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.  தேயிலை சபையின் நிதி கடந்தகாலங்களில் விளம்பர பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

அச்சபையிலுள்ள நிதியைக்கூட தற்காலிகமாக நிவாரணத் திட்டத்துக்கு பயன்படுத்தலாம். பெருந்தோட்டப்பகுதிகளில் மரம் வெட்டுதல், சுற்றுலா உள்ளிட்ட இதர விடயங்களால் இலாபமாக பெற்ற பணத்தை தோட்டக் கம்பனிகளும் பயன்படுத்த வேண்டும். வெற்றிகரமான பொறிமுறை உருவாக்கப்படுமானால் எம்மாலும் நேசக்கரம் நீட்டக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles