பொகவந்தலாவ நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் முகாமையாளராக பணியாற்றிவந்தவரை தாக்கினார் எனக் கூறப்படும் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தமது ஆடை விற்பனை நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிவந்த நபரை, உரிமையாளர் நேற்று தாக்கியுள்ளார். சிசிரிவி கமராக்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டே தாக்குதல் நடத்தியுள்ளார் என கூறப்படுகின்றது.
40 லட்சம் ரூபா கடன் பணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்து தருமாறு வலியுறுத்தியே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சப்பாத்து காலில் தன்னை மதித்து , நெஞ்சி பகுதியில் தாக்கினார் என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் உளரீதியில் பாதிக்கப்பட்ட முகாமையாளர் நேற்று வீடு செல்லவில்லை. நள்ளிரவுவரை வீடு திரும்பாததால் அது தொடர்பில் உறவினர்கள், பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
தோட்ட மக்கள் இணைந்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
எனினும், பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் உரிய வகையில் செயற்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை பெற்றுகொடுக்குமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டார் எனக் கூறப்படும் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்