உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் அந்த தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக் குழு இந்த அறிவிப்பை விடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
அதே வேளை 2023 உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளது.
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய அடிப்படை உரிமை மனு தொடர்பில் 2024 ஓகஸ்ட் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை தேர்தல் ஆணைக்குழு கவனத்திற் கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தினத்தில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுக்கு இணங்க சட்டபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதும் உடனடியாகவே ஆணைக்குழு மிக விரைவாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு திகதியை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.