ஆட்டுப்பட்டித்தெரு சம்பவம்: மலையகத்தில் பதுங்கி இருந்த எழுவர் கைது!

கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எழுவர் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலஹா பொலிஸின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால், கலஹா, தெல்போட்டை கிறேட்வெளி தோட்டத்தில் உள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு ஆண்களும், இரு பெண்களும் மற்றும் இவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆட்டுப்பட்த்தெருவில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்துள்ளது.

கொழும்பு, ஜிந்துபிட்டிய பகுதியில் ஜனவரி 24 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டனர். இதன்போது ஒருவர் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்களை பெப்ரவரி 7 ஆம் திகதி பகல் நபரொருவர் பார்வையிட வந்துள்ளார். இருவருக்கும் பால் பக்கட்டுகளை வழங்கியுள்ளார். பனிசும் வழங்கப்பட்டுள்ளது. பாலை அருந்திய பின்னர் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்கக்ப்பட்டனர். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஜிந்துபிட்டிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் ‘குடு செல்வி’ யின் தரப்பை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்துடன், துப்பாக்கிச்சூடு நடத்திய தரப்பு பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் சகாக்களாவர். இந்நிலையிலேயே இதற்கு பழிதீர்க்கும் வகையில் பொலிஸில் இருந்த பூகுடு கண்ணாவின் சகாக்களுக்கு, குடு செல்வி தரப்பு இவ்வாறு விஷம் கலந்த பாலை வழங்கி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விஷம் கலந்த பாலை கொண்டு சென்றவர் பூகுடு கண்ணாவின் குழுவை சேர்ந்தவர் எனவும், அவரை குடு செல்வி தரப்பு விலைக்கு வாங்கியே இந்த செயலை செய்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles