‘போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட உள்ளக விசாரணை அவசியம்’

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவின் செயல்கூட போர்க்குற்றம்தான். எனவே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடவேண்டுமெனில் சுயாதீன உள்ளக விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச விசாரணையை எமது அரசு ஏற்கவில்லை. குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்கு உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியே வழங்கப்பட்டிருந்தது. இதன்படி தேசிய பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

போரை முன்னெடுக்கையில் சர்வதேச சட்டத்திட்டங்களை நாம் முழுமையாக பின்பற்றினோம். போர்க்களத்தில் குற்றங்கள் இழைக்கப்படவில்லை. சிறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால்கூட அதற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தினேன். இறுதிப்போரின்போது மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. மெசின் கன் பயன்படுத்தவில்லை. இதனால் இறுதி நான்கு மாதங்களில் அதிகளவில் இராணுவத்தினர் உயிரிழந்தனர்.

ஆனால் போர்களத்துக்கு வெளியில் சுனில் ரத்னாயக்க என்பவர் செய்த செயல் (மிருசுவில் படுகொலை) தவறு. அப்போது நான் யாழ். கட்டளைத் தளபதியாக இருந்தேன். சீருடை அணிந்தவர் என்பதற்காக அவ்வாறு செய்யமுடியாது. அதுகூட போர்க்குற்றம்தான்.

இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. அதனை நிராகரிக்கின்றோம். சர்வதேசத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சிலரால் வழங்கப்படும் தகவல்களை நம்புகின்றனர். எனவே, என்ன குற்றச்சாட்டு, எத்தனை பேர் கொல்லப்பட்டனர், சம்பவம் எங்கு நடைபெற்றது என்பன தொடர்பான தகவல்களை முன்வைக்குமாறு அரசு கோர வேண்டும். அவ்வாறு முன்வைக்கப்பட்டால் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும். கலப்பு நீதிமன்றம் தேவையில்லை. குற்றச்சாட்டுகளை வெறுமனே முன்வைக்கமுடியாது. ஆதாரங்கள் தேவை.” – என்றார்.

Paid Ad
Previous article‘தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்காது தீர்வை முன்வைக்கவும்’
Next articleஉலகின் பத்து விசித்திரமான பண்ணைகள் (வீடியோ)