போலி ஆவணங்களைத் தயாரித்து மூன்று மாத சிசுவொன்றினது தீராத நோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைக்கு பணம் திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கினிகத்தேனை நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை (04) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான இப்பெண், இப்பெண்ணின் சகோதரர் மற்றும் வாடகைக்கு நியமிக்கப்பட்ட மற்றுமொருவர், முச்சக்கரவண்டியொன்றில் கினிகத்தேனை நகரில் ஒலிபெருக்கி மூலமாக விடயத்தை அறிவித்து பணம் திரட்டிய போது சந்தேகமடைந்த கினிகத்தேனை பொலிஸார், இவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.
இப்பெண்ணின் கணவர், இப்பெண்ணிடமிருந்து விவகாரத்து பெற்றதைத் தொடர்ந்து, இவ்வாறு பணம் திரட்டி வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான பெண்ணினுடைய பெண் பிள்ளையொன்று சிறுவயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டி இப்பெண் பணம் திரட்டியதாகவும் எனினும், படத்திலிருந்த அச்சிசு வளர்ந்து தற்போது 8 வயதாகி பாடசாலைக்கு செல்வதாகவும் தனது விவாகரத்து பெற்ற கணவரின் பொறுப்பில் சிறுமி இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான நகரங்களுக்குச் சென்று, நாளொன்றுக்கு 5,000 ரூபாவுக்கு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி, அதில் சிசுவின் புகைப்படத்தை ஒட்டி, பணம் திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 29 வயதுப் பெண், வாழைச்சேனையைச் சேர்ந்தவரென்பதுடன், அப்பெண்ணின் சகோதரர் 28 வயதுடையவராவர். மற்றையவர், தோப்பூரைச் சேர்ந்த 28 வயதுடையவராவர்.
மேலும், இப்பெண்ணின் வங்கிக் கணக்கில் 130,000 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதுவும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










