மக்கள் புரட்சியில் (அறகலய) இருந்து ஆட்சியாளர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சமூகம்மீது தற்போதைய இளைஞர்களுக்கு அதிக அக்கறை இருக்கின்றது. அந்த அக்கறையின் காரணமாகவே மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால் இதனை ஆட்சியாளர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் போராட்டத்தை ஏளனப்படுத்தும் விதத்தில் கதைக்கின்றனர்.
இது குடுகாரர்களின் போராட்டம் என விமர்சிக்கின்றனர். விபசார தொழில் ஈடுபடுபவர்களின் போராட்டம் எனவும் கூறுகின்றனர். நாட்டுக்காக போராட முன்வந்தவர்கள் குடு காரர்களா? அதாவது போராட்டத்தில் இருந்து இந்த அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே இதன்மூலம் புலனாகின்றது.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் போன்றோரின் அரசியல் தற்போது எவ்வாறு உள்ளது? இதுவா மக்கள் எதிர்பார்த்த மாற்றம்? மக்கள் போராட்டத்தால் ஒளிந்திருந்தவர்களின் மனங்களில் இருந்து அந்த மிருகம் மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது.” – என்றார்.
