முன்னாள் நிதி அமைச்சரும் கடந்தகால அரசாங்கங்களில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்திருந்த சிரேஷ்ட அரசியல்வாதி மங்கள சமரவீரவின் திடீர் மறைவானது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தமது ஆரம்பகால அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் 1989ஆம் ஆண்டு முதல் முதலாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
1994ஆம் ஆண்டு அமையப்பெற்ற சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்கவின் அரசாங்கத்தில் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் இலங்கையில் ஓர் அரசியல் ஆளுமையாக உருவெடுத்த இவர், ஐ.தே.க மற்றும் சு.கயின் அரசாங்கங்கள் அமையப்பெற்றிருந்த பல சந்தர்ப்பங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கையில் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றங்களின் பின்புலத்தில் இவர் ஒரு முக்கிய கருவியாகவும் செயற்பட்டிருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் சிறிது காலம் வெளிவிவகார அமைச்சராகவும் பின்னர் நிதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். இவர் நாட்டின் அனைத்து இனங்களினதும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன், உள்ளநாட்டிலும் சர்வதேசத்திலும் இதற்கான பல்வேறு நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறைகளையும் கையாண்டிருந்தார்.
கடந்த அரசாங்காத்தின் காலத்தில் புதிய அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர வேண்டுமென்பதில் முனைப்புடன் செயல்படத்தில் முக்கியமான நபராக மங்கள சமரவீர திகழ்ந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் ஆரம்பித்து மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலம் தொட்டு இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் நட்பு ரீதியாக செயற்பட்ட ஒரு அரசியல் பிரதிநிதியுமாவார்.
இவரது இழப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்துவதுடன், இலங்கையில் அரசியலில் இதுவொரு தவிர்க்க முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
