மடுல்சீமையிலிருந்து கொழும்புக்கு 8 கிலோ மஞ்சள் தூளை எடுத்துச் செல்ல முயன்ற நபர், பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளார். அதையடுத்து காட்போட் பெட்டியொன்றில் பொதி செய்யப்பட்டிருந்த மஞ்சள் தூளை மடுல்சீமைப் பொலிஸார் மீட்டளனர்.
இச்சம்பவம் 25-09-2020ல் இரவு மடுல்சீமையில் இடம்பெற்றுள்ளது.
மடுல்சீமையிலிருந்து இரவு கொழும்புக்கு செல்லும் பஸ்சில் மேற்படி மஞ்சள் தூள் பொதி ஏற்றப்பட்டது. அப்பொதியை ஏற்றியவரிடம் பொதிக்குள் என்ன உள்ளதென்று பஸ் நடாத்துனர் கேட்டுள்ளார். அப்போது அந்நபர் மஞ்சள் தூள் உள்ளது. கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று கூறியுள்ளார்.
அதையடுத்து, பஸ் நடாத்துனர் மஞ்சள் தூள் பொதியை எடுத்துச் செல்ல முடியாதென்று கூறினார். அவ் வேளையில், அப் பஸ்சில் சிவில் உடையிலிருந்த பொலிசார், அந் நபரை விசாரணைக்குற்படுத்தி விளக்கம் கேட்டனர். அப்போது, அந் நபர் பொலிசார் பிடியிலிருந்து இரவு வேளையிலேயே தப்பிச் சென்றுள்ளார்.
பஸ்சிலிருந்த மஞ்சள் தூள் பொதியை மீட்ட பொலிசார் அதனை பரிசீலனை செய்தனர். அப்பொதிக்குள், இரு கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட அட்டையொன்றிருந்தது. அத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள பொலிசார் முனைந்த போதிலும், அவ் இலக்கங்கள் செயலற்றுள்ளன. தொடர்ந்தும் பொலிசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய நபர் குறித்தும் தேடுதல்களை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சள் தூள் பொதி தற்போது, மடுல்சீமைப் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை