மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இந்த தகவை வெளியிட்டுள்ளது.
ரயில் மார்க்கத்தில் சரிந்துள்ள கற்கள் மற்றும் மண்ணை அகற்றும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்கள ஊழியர்களும், தியத்தலாவை இராணுவ முகாமின் இராணுவத்தினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணத்தை ஆரம்பிக்க ‘உடரட்ட மெணிக்கே’ புகையிரதம் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி நேற்றிரவு வந்த தபால் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகள் பஸ்களிலேயே தத்தம் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் .
அதேவேளை, கடந்த 17 ஆம் திகதியும் புறக்கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில்மீது 153/13 மைல் கம்பத்துக்கு அருகில் வைத்து மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜ்