” மத்திய வங்கி ஆளுநர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. அவ்வாறு வழங்கவும் முடியாது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரம் அமைச்சரவைக்கே இருக்கின்றது. எனவே, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரம் மத்திய வங்கி ஆளுநருக்கு வழங்கப்படாது.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே நாட்டுக்காக மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு அஜித் நிவாட் கப்ரால் முன்வந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அவர் தீவிரமாக செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக விசேட பணியாட் தொகுதியொன்றை அவர் கோரியிருக்கலாம். அதனை வழங்குவதில் தவறு கிடையாது.
அத்துடன், அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.” – என்றார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க நேற்று எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை அவர் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.