‘மனிதனுக்குள் இனத்தையும், மதத்தையும் தேடாமல் மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கியவர்’

” மனிதனுக்குள் இனத்தையும், மதத்தையும் தேடாமல் மனித நேயத்துக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீர. ஜனநாயகத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராக பொங்கியெழுந்து போராடியவர். முக்கியமானதொரு காலகட்டத்தில் அவரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” 1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த மங்கள சமரவீர 3 தசாப்தங்களாக சபையில் நீடித்து நிலைத்தார். சுதந்திரக்கட்சி பக்கம் இருக்கும்போதும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். ஜனநாயக விரோதச்செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தார். போர் காலத்தில் மஹிந்த அரசாங்கம் முன்னெடுத்த சில நடவடிக்கைகளாலும், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அன்றைய அமைச்சரவையில் இருந்து வெளியேறினார்.

எதிரணி பக்கம் வந்த பிறகும் ஜனநாயகம், மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்தியதாகவே அவரால் தேசிய அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இதனால்தான் சர்வதேச மட்டத்தில் அவருக்கான ஆதரவு பெருகியது. சர்வதேச அமைப்புகளும் அவரை மதித்து செயற்பட்டன. எதற்காகவும் கொள்கைகளை அவர் விட்டுக்கொடுத்தில்லை.

2015 இல் ஆட்சிமாற்றத்துக்கு பெரும் பங்காற்றினார். நல்லாட்சியின்போது ஜனநாயக அம்சங்களை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டார். ஆளுந்தரப்பில் தவறுகள் இழைக்கப்பட்டால்கூட அதனை தைரியமாக சுட்டிக்காட்டக்கூடியவர். அதுமட்டுமல்ல பௌத்த தேரர்கள் உட்பட ஆன்மீகத் தலைவர்கள் ஏதேனும் சந்தர்ப்பத்தில் எல்லைமீறி செயற்படும்பட்சத்தில் அதனை வெளிப்படையாகவே விமர்சிக்கக்கூடியவர்.

வாக்கு வங்கியை மையப்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி அரசியல் நடத்தாமல் ஜனநாயக வழியில் செயற்பட்ட மங்களவின் பயணம் பாராட்டத்தக்கது. தற்போதைய ஆட்சியின்கீழ் ஜனநாயகம் மீறப்படுகின்றது. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறானதொரு காலகட்டத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு மங்கள போன்ற அனுபவம் மிக்க, சர்வதேசத்தின் ஆதரவை பெற்ற அரசியல் பிரமுகர்கள் எம்மைவிட்டு பிரிந்தமை பேரிழப்பாகும்.

நிதி அமைச்சராக அவர் செயற்பட்ட காலத்தில் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு தயக்கமின்றி அங்கீகாரத்தை வழங்கினார். தனி வீட்டுத்திட்டம், உட்கட்டமைப்பு வச்திகள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் உதவி வழங்கினார். இப்படிபட்ட ஒருவர் இல்லாம வேதனை அளிக்கின்றது. அன்னாரின் ஆத்மா இறைப்பாறட்டும். அவரின் பிரிவால் வாழும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles