மலையக அதிகார சபை மீது கை வைக்கவே வேண்டாம்!

– ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

“2018 ஆம் வருட 32 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை”யை மூடி விட, உங்கள் அரசால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாகக் கை விடுங்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நுவரெலியா, கொழும்பு – அவிசாவளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்ட பெருந்தோட்டப் பிராந்தியங்களில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சிகளில் வளர்ச்சி குன்றிய பிரிவினர் என்பதைப் புள்ளி விவரங்கள காட்டுகின்றன.

இது 200 வருட சாபம். இதற்குக் காரணம், இந்தச் சமூகம் இந்த நாட்டின் தேசிய வரம்புக்குள் கொண்டு வரப்படாமல் இன ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டமை ஆகும். இதற்குக் காரணம், இவர்கள் அந்நியர்கள், இவர்கள் தமிழர்கள், இவர்களுக்கு காணி வழங்கக் கூடாது, வீடு வழங்கக் கூடாது, தேசிய கல்வி கட்டமைப்புகள் கொண்டு வரக் கூடாது, தேசிய சுகாதார கட்டமைப்புகள் கொண்டு வரக் கூடாது, பிரஜாவுரிமை வழங்கக் கூடாது என எம் மீது காட்டப்பட்ட, காட்டப்படும் இனவாதம்தான்.

200 வருட ஒடுக்கு முறையில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் இந்தச் சமூகத்தின், கல்வி தரும் பாடசாலைகள், 1976 ஆம் ஆண்டிலேயே தேசிய கல்விக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.

கடைசி தொகுதி குடியுரிமையும் 2003ஆம் ஆண்டிலேயே வழங்கப்பட்டு முழுமை அடைந்தது. ஆகவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் நாம் தாமதமாகவே நடக்க ஆரம்பித்தோம். இதனால், இந்தச் சமூகம், பின்தங்கிய சமூகமாக இன்றும் இருக்கின்றது.

இந்த இன ஒதுக்கல், கொள்கையை இந்த நாட்டில் அனைத்து பெரும்பான்மைக் கட்சிகளும் முன்னெடுத்தன. இந்தச் சூழலில், இதைக் கணக்கில் எடுத்தே 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த அன்றைய நல்லாட்சி அரசில், தமிழ் முற்போக்குக் கூட்டணியினராகிய நாம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்தோம். அதுவரை மறுக்கப்பட்டு வந்த அல்லது உதாசீனம் செய்யப்பட்டு வந்த, காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை ஆகியவற்றைப் பெற்று எடுக்கும் பெரும் பணியை நாம் ஆரம்பித்தோம்.

இவற்றை வெறும் ஒரு துறை சார்ந்த அமைச்சால் மட்டும் செய்ய முடியாது. அமைச்சுகளுக்கு மேலாக, பல்வேறு துறை சார்ந்த அமைச்சுகளின் பணிகள் கூட்டி இணைக்க பட வேண்டும். இந்தப் பிரதான தேவை பின் புலத்தில், மலையக மக்களின் விசேட குறைதீர் கொள்கை தேவை அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனமே, மலையக அதிகார சபை ஆகும்.

நீங்கள் இன்று இதை, ஓர் அமைச்சின் அங்கமாக மாற்ற முயல்கின்றீர்கள். அமைச்சு என்பதும் அதன் நடவடிக்கைகளும், நாட்டின் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன. நாளை குறிப்பிட்ட அமைச்சு இல்லாமல் போகுமானால், அந்த அமைச்சின் அங்கமும் காணாமல்போய் விடும். ஆனால், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் மூலமாக உருவாக்கப்பட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள், என்பன அமைச்சுகள், அரசுகள் மாறுகின்ற காரணத்தால், மாறி விடாது. காணாமல்போய் விடாது. இந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்று இம்மாதத்துடன் ஒரு வருடம் நிறைவு பெறுகின்றது. வாழ்த்துக்கள். மலையக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளீர்கள். ஆனால், இந்த ஒரு வருடத்தில் சொல்லிக் காட்ட, எடுத்துக் காட்ட, மலையகப் பிராந்தியத்துக்கு உங்கள் அரசு காத்திரமாக எதுவும் செய்து விட வில்லை. ஆனாலும், நாம் பொறுமையாகக் காத்திருக்கின்றோம்.

நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை விட, இன்று, இருப்பதையும் பிடுங்கி எடுக்க முயல்கின்றீர்கள். அதையும் நாம் பொறுமையாக ஏற்றுக்கொண்டு இருக்க முடியாது என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

நீங்கள் செய்ய முயலும் இந்தக் காரியத்தின் பாரதூரத் தன்மையைத் தெரிந்து கொண்டா, அல்லது தெரியாமலா, நீங்கள் செய்கின்றீர்கள் என எனக்கு விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும், 2018 ஆம் வருட 32 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நாம் எமது ஆட்சிக் காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை” என எம்மால் அறியப்படும் “பெருந்தோட்டப் பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை”யை மூடி விட, உங்கள் அரசால் எடுக்கப்படும் முயற்சியை உடனடியாகக் கைவிடுங்கள் எனக் கோருகின்றேன்.” – என்றுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles