ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் மலையக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று நோர்வூட் பிரதேசசபை தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளருமான ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
” மலையக மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு புதிதாக பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அம் மக்களுக்கு பிரதேச சபையின் ஊடான தேவைகளை நிறைவேற்றுவதில் பல இடர்பாடுகள் காணப்பட்டன. இதற்குக் காரணம் காணி உரிமையை தோட்ட நிறுவனங்கள் கொண்டிருந்ததாகும். ஆனால் தற்போது காணி உரிமை பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டம் வழி வகுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
” பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் கடந்த காலங்களில் பல்வேறு வகையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் பல உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலை யும் காணப்படுகிறது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு 10 பில்லியன் ரூபாய்களை உட் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் மலையகத்தில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கிறோம்.
நீர்வளங்கள் மட்டும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் மலையக மக்களுக்கான பல்வேறு உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்துவோம். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் பின்னடைவை எதிர்நோக்கி இருந்த அபிவிருத்தி வேலை திட்டங்கள் அடுத்து வரும் ஆண்டில் விரைவு படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.” எனவும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குழந்தைவேல் ரவி தெரிவித்துள்ளார்.