“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம் மற்றும் சமூக நீதியை விருத்தி செய்வதால் மட்டுமே முடியும்.” – என்று சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்,மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 இற்கு மேல் மதிப்பெண்களை பெற்ற மலையக பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டும் நிகழ்வு மனித அபிவிருத்தி தாபனத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“ மலையக மக்கள் நவீன அடிமைத்தனத்திலிருந்து சமூக அரசியல் மாற்றத்திற்கு தயாராக வேண்டும்” என்ற தொனிப்பொருளின்கீழ் பன்விலை விக்னேஸ்வரா மத்திய கல்லூரி மாணவர்களை பாராட்டும் நிகழ்வு ஞாயிற்று கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய சிவப்பிரகாசம் மேலும் கூறியவை வருமாறு,
“ கல்விசார் பெறுபேறுகளில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் சில வேளைகளில் பெற்றோர்களும், பிள்ளைகளும் உளவியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். சில வேளைகளில் விரக்தியில் கூட வாழ்ந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் பிள்ளைகளை பாராட்டுவதன் மூலம் அவர்களின் இயலுமையை விருத்தி செய்யலாம் என தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியின்பால் உள்ள நம்பிக்கையை மேலும் விரிவடைய செய்யவும், பெறுபேறுகளின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டி, நம்பிக்கையையும், உறுதியையும் பேணவும் இவ்வாறான பாராட்டுகள் முக்கியம் பெறுகின்றன. எனவே தான் நாம் இவ்வாறான பாராட்டு வைபவங்களையும் பெற்றோருக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
மலையக பெருந்தோட்ட துறையில் இன்றும் சிறுவர் தொழிலாளர் நிலைமை காணப்படுகின்றது. இலங்கையில் மலையக சிறார்களே அதிகமாக சிறுவர் தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அத்துடன் இது அடிமைத்தனத்தின் ஒரு வெளிப்பாடாகும். இந்த அடிமைத்தனம் கடந்த 200 வருடங்களாக நம்மை தொடர்ந்து வருகின்ற ஒரு சாபகேடாகும்.
அதேநேரத்தில் இது இலங்கையில் வேறு எந்த சமூக அமைப்பிலும் காணப்படவில்லை. மலையக அரசியல் தளம் மற்றும் சமூக கட்டமைப்பு மிக பலவீனமானதாகவும், ஒரு நவீன அடிமைத்தனத்தை உறிஞ்சிக்கொண்டிருப்பதனாலும் மலையக சமூகம் இவ்வாறான ஒரு பிற்போக்கு தனத்தை கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக மலையக சமூகத்தை ஆட்சி செய்து வருகின்ற பலவீனமான அரசியல் இதற்கு ஒரு காரணமாக இருந்துவருகின்றது. இந்த அரசியல் கட்டமைப்பு உடைத்தெறிய வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். வெறுமனே பாடசாலை கட்டடங்களையும், பௌதீக வளங்களை விருத்தி செய்வது மாத்திரம் போதுமானதல்ல. பாடசாலைக்குள் அரசியல் நுழைவதையும் தடை செய்யவேண்டும்.

எனவே ஒரு ஆரோக்கியமான சமூக அரசியல் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இதுவே மலையக கல்வி வேகமான மாற்றத்திற்கு செல்ல காரணமாக இருக்கும் என நம்புகின்றோம்.” – என்றார்.
ஆ.ரமேஷ்
