” 1948 இல் இலங்கையின் வெளிநாட்டு மூலதனம் என்பது ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இருந்தது. ஜேர்மனுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு இலங்கையின் வெளிநாட்டு மூலதனம் இருந்தது. இதற்கு எமது மக்களின் உழைப்புதான் பிரதான காரணம். தேயிலை, இறப்பர் ஏற்றுமதிமூலம்தான் அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்றது. ஆனால் இப்படியான மக்களுக்கு இந்த நாடு வழங்கியுள்ள பரிசுதான் ‘ஒன்றுமே இல்லை’ என்பதாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1948 இல் இலங்கையின் வெளிநாட்டு மூலதனம் என்பது ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இருந்தது. ஜேர்மனுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு இலங்கையின் வெளிநாட்டு மூலதனம் இருந்தது. இதற்கு எமது உழைப்புதான் பிரதான காரணம். தேயிலை, இறப்பர் ஏற்றுமதிமூலம்தான் அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்றது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கியே திறைசேரியை காலியாக்கிவிட்டனர்.
இலவச கல்வி, இலவச சுகாதாரம் என்பவற்றில் இலங்கை சிறந்த நிலையில் உள்ளது. இதற்கும் எமது மக்களின் நிதிதான் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு நாட்டுக்காக பாடுபட்ட எம் மக்களுக்கு இந்த நாடு தந்த பரிசுதான், ‘ஒன்றுமில்லை’ என்பது. இலங்கையில் பின்தங்கிய பிரிவினராகவே பெருந்தோட்ட மக்கள் உள்ளனர் என ஐ.நா. அறிக்கையாளர்கூட அறிக்கையிட்டுள்ளார். சுதந்திர இலங்கையில் இதுதான் எமது மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு.
4000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், நில உரிமை பற்றியும் ஜனாதிபதி பேசுகின்றார். அமைச்சர் விடாப்பிடியாக இருந்து இதை பிடுங்கி எடுக்க வேண்டும். ஏனெனில் ஜனாதிபதி ரணிலை பற்றி எமக்கு தெரியும். வரும் என்பார் வராது.
10 பேர்ச்சஸ் நிலம் பற்றி கூறப்பட்டுள்ளது. நல்ல விடயம். 7 பேர்ச்சஸை நாங்கள் தந்துவிட்டோம். 3 ஐ கூட்டி 10 ஆக நீங்கள் கொடுங்கள். ” – என்றார் மனோ.










