“ கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டை பொருளாதார ரீதியாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற மலையக பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தை, மதியம் 2 மணிக்கு பின் குடித்து கும்மாளமடிக்கும் சமூகமாக சித்தரித்து நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இழிவுப்படுத்திருப்பது வெட்கக்கேடான விடயமாகும். அவர் ஊடகப்பேச்சாளர் பதவியை மட்டுமே துறந்துள்ளார். அவர் எமது மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட நோயல் பிரியந்த என்பவருக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (23-02-2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஹட்டன் அம்பிகா சந்தியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ மலையக பெருந்தோட்ட உழைப்பாளர்கள் ஆளாளுக்கு உதைத்து விளையாடுவதற்கு கால்பந்து அல்ல. அவர்கள் இந்த நாட்டுக்கு 80 வீதமான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவர்கள். அவர்களின் உழைப்பு தான் நாட்டில் இலவச கல்வி இலவச மருத்துவம் என பல சமூகநலத்திட்டங்களுக்கு பங்களிப்புசெய்கின்றன.
அதையெல்லாம் மறந்து ஒட்டுமொத்த பெருந் தோட்டத் தொழிலாளர்களையும் குடிகாரர்களாக சித்தரித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது . நோயல் பிரிந்த அவர்கள் எந்த அடிப்படையில் இந்த கருத்தை முன்வைத்தார் என்பது தெரியவில்லை.
மக்கள் இன்று மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குகூட முடியாத நிலையிலுள்ளபோது அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக சிந்திக்காது அதை திசைதிருப்ப ஒரு சமூகத்தை இழிவுப்படுத்த முனைந்துள்ளார் .
இது மிகவும் பாரதூரமான கருத்தாகும். அவர் பதவி விலகுவதும், மன்னிப்பு கேட்பதும் மட்டும் அந்தமக்களுக்கு ஏற்பட்ட மனக்குமுரல்களை தணித்து விடாது . இனியும் இதுபோன்ற இழிவான கருத்துக்கள் வெளிவராமல் இருப்பதற்கு இறுக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். மேலும் மக்களுக்கு அநீதி ஏற்படும்போது உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் அவற்றை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.” – என்றார்.
செ.தி. பெருமாள்