” 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த யோசனை உள்வாங்கப்படவில்லை.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான பா. சிவநேசன் தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொருட்களின் விலையேற்றத்தால் மலையக மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் நாட் சம்பளம் என்பது ஒருவேளை உணவுக்குகூட போதாதுள்ளது. ஆகவே பாதீடு ஊடாக விசேட கொடுப்பனவு எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஜனாதிபதி தவிடுபொடியாக்கியுள்ளார். இந்நிலையில் மலையக பிரதிநிதிகள் பாதீட்டை வரவேற்பது வெட்கக்கேடாகும்.
மலையக பல்கலைக்கழகம் பற்றி பேசப்பட்டுவருகின்றதேதவிர, இன்னும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பாதீட்டிலும் பல்கலைக்கழக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரும்வரை நம்ப முடியாது. காணி உரிமைக்கான முன்மொழிவுக்கூட சந்தேகம்தான். ஆக ஆட்களை வைத்து பட்டாசு கொளுத்தி நாடகம் ஆடுவதைவிடுத்து, பாதீட்டில் உள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்.
வரிகள் மட்டும் ஜனவரியில் அதிகரிக்கின்றது, ஆனால் கொடுப்பனவு ஏப்ரல்மாதம்தான் அதிகரிக்கின்றது. ஆக இது தேர்தலை குறிவைத்து, போலி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள – மலையக மக்களுக்கு பயனற்ற பாதீடாகும்.” – எனவும் பா. சிவநேசன் குறிப்பிட்டார்.