மவுன்ன்ஜீன் தோட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு மக்கள் போர்க்கொடி

வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தோட்ட மக்கள் எதிப்பினை தெரிவித்துள்ளனர்.

மௌன்ஜீன் தோட்டத்தில் சுமார் 250 குடும்பங்களும் அயல் கிராம மக்களும் இப்பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவருமே அகழ்வு பணிக்கு எதிர்ப்பிணை தெரிவிக்கின்றனர்.

மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் திணைக்களம் மற்றும் வனபாதுகாப்பு திணைக்களம் என்பன இணைந்து ஆற்றுப்பள்ளதாக்கில் ஆரம்பக்கட்ட மாணிக்கக்கல் அகழ்வு பணிகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் தோட்ட மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மௌன்ஜீன் தோட்டத்தின் ஆற்றுப்பள்ளதாக்கில் மாணிக்கக்கல் அகழ்வு பணிகளை மேற்கொண்டால் தாம் பல்வேறு சூழல் பிரச்சினைகளை எதிர்நாேக்க நேரிடும் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த காலங்களில் மாணிக்கக்கல் அகழ்வுகள் மேற்கொண்ட பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டிருப்பதினாலேயே தோட்ட மக்கள் குறித்த வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மாணிக்கக்கல் அகழ்வு செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகள் ஊடாகவே தாேட்டத்துக்கான பிரதான வீதி அமைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்குமிடத்து அது தமக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் மாணிக்கக்கற்கள் அகழ்வு மேற்கொள்ளுமிடத்து வட்டவளை புகையிரத நிலையம் அமைந்த பகுதிகள் பாரிய நிலம் தாழ் இறங்கலாம் என அத்தோட்ட மக்களும் கிராம வாசிகளும் விசம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி தாழிறங்கும் பட்சத்தில் மகாவலி ஆற்றுப்பகுதியில் பாரிய அனர்த்தத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வட்டவளை பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களுக்கும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வட்டவளை நகர மக்கள் நீர் மின் உற்பத்திக்காக கட்டப்பட்ட அணையால் வருடாந்தம் வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்படுகின்றனரோ அது போல் வரும் காலங்களில் இவ்வேலைத்திட்டத்தினால் தாம் பாரிய மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் சூழல் பாதுகாப்பாளர்கள் ஏனைய காடழிப்பு மற்றும் ஏனைய சூழல் அத்துமீறல்களுக்கு குரல் கொடுக்கின்றனர். அது போல் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இவ்விடத்தில் இவ்வாறான மாணிக்கக்கல் அகழ்வு முயற்சிகள் மேற்கொண்ட போது அரசியல்வாதிகள் முன்வந்து அதனை தடுத்து நிறுத்தினர். அதுபோல் சூழலுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் இவ்விடத்தில் மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளவிருந்த தருணத்தில் அதனை அப்போதைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சராகவிருந்த பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது தடுத்து நிறத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது போல் தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் மலையக தொழிற்சங்க அமைச்சர்கள் இதுவிடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

Paid Ad
Previous article‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’
Next article‘ரீலோட் பொறியில்’ இருந்து வாடிக்கையாளரை விடுவிக்கும் எயார்டெல்