மாத்திரைகளை விழுங்கி மயங்கி விழுந்த குழந்தை – பதுளையில் சம்பவம்

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்காக பாவிக்கப்படும் மாத்திரைகளை, ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று விழுங்கியதையடுத்து  அக் குழந்தை ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளையை அண்மித்த மீகாகியுல என்ற இடத்திலேயே, இன்று (28) மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட குழந்தையின் தாயாரின் பாட்டி நீரழிவு மற்றும் இரத்த அழுத்தங்களுக்கு மாத்திரைகள் பலவற்றை பாவித்துவருபவராவார். இதனை கவனித்துவந்த குழந்தை, பாட்டி இல்லாத வேளையில், பாட்டி பாவித்த மாத்திரைகளை எடுத்து, சிலவற்றை விழுங்கியுள்ளது. சிறிதுநேரத்தில் அக் குழந்தை மயங்கிவிழுந்தது.

இதைக் கண்ட குழந்தையின் தாய், அருகேயுள்ள மீகாகியுல பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதும்,குழந்தையைப் பரிசோதனை செய்த வைத்தியர் ,உடனடியாக அக் குழந்தையை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் பணித்தார்.

தற்போது அக் குழந்தை பதுளை அரசினர் மருத்துவமனை தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்றுவருகின்றார்.

எம்.செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles