மாபியாக்களின் பிடிக்குள் சிக்கிவிட்டது அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நேற்று நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வறுமை அதிகரித்து வருகின்றன.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles