முக்கியத்துவம் மிகுந்த ஆண்டில் காலடி வைத்திருக்கும் இலங்கை

உலகம் புதுவருடத்தில் நேற்று பிரவேசித்தது. உலகோடு சேர்த்து இலங்கையும் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்நாடு ஒரு வித்தியாசமான சூழலுக்கு முகம் கொடுத்த பின்னர் புதுவருடத்தில் பிரவேசித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதாவது இந்நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முன்னொருபோதும் முகம்கொடுத்திராத பொருளாதார நெருக்கடிக்கு கடந்த வருடம் முகம்கொடுத்தது. அந்நிய செலாவணிப் பற்றாக்குறையினால் தோற்றம் பெற்ற இந்நெருக்கடியினால் மக்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். குறிப்பாக அந்நிய செலாவணி பயன்படுத்தப்படுகின்ற பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரிதும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. சிற்றுண்டிச்சாலைகளையும் கூட நடத்திச் செல்ல முடியாத அசௌகரியம் ஏற்பட்டிருந்தது.

அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களதும் விலைகளும் அதிகரித்தன. அந்நிய செலாவணி பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் இறக்குமதியும் கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறான சூழலில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வையும் நிவாரணத்தையும் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் முன்னெடுக்கலாயினர். இதன் விளைவாக கடந்த வருட முற்பகுதியில் முதலில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அம்மாற்றம் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

அதனால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் சொற்ப காலத்தில் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கொண்டு வரவில்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நாட்டை விட்டு வெளியேறி இருந்தபடி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொதிநிலைக்கு மத்தியில் எவரும் முன்வராத சூழலில் நாட்டைப் பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கலானார். ​

அதன் பயனாக கடந்த வருடம் ஏப்ரல், மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் நிலவி வந்த தீவிர பொருளாதார நெருக்கடி கட்டம் கட்டமாகத் தணிவடையத் தொடங்கியது. அதன் பிரதிபலன்கள் மக்களைச் சென்றடையவும் ஆரம்பித்தன. குறிப்பாக எரிபொருள், எரிவாயுவை முன்பு போன்றல்லாது பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இப்பின்னணியில் வீதி வாகனப் போக்குவரத்து குறுகிய காலப்பகுதிக்குள் வழமை நிலைக்கு திரும்பும் நிலைமை உருவானது. அத்தோடு எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பல தடவைகள் விலைக் குறைப்பு செய்யவும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளையும் அவ்வப்போது குறைக்கப்படக்கூடிய வாய்ப்பும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வும் நிவாரணமும் கோரிய ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் பெரிதும் குறைவடைந்து விட்டன. கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளைக் கையாண்ட அனுபவங்களைப் பயன்படுத்தி இப்பொருளாதார நெருக்கடியையும் ஜனாதிபதி முகாமைத்துவம் செய்தன் பிரதிபலன்களை நாடு அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில்தான், நாடு புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது.

இந்நிலையில் இப்புத்தாண்டின் நிமித்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘முன்னொரு போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய மற்றும் நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கறிவேன். எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாகவே கருதுகிறேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் கடந்த வருடம் ஏப்ரல் முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் முகம் கொடுத்திருந்த பொருளாதார நெருக்கடியை நாடு கடந்து விட்டது என்பதில் ஐயமில்லை. இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்றுவரும் இந்நாட்டுக்கு புதிய வருடம் முக்கியத்துவம் மிக்க தீர்க்கமான ஆண்டாகவே இருக்கும். அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் வளமானதும் சுபீட்சமானதுமான தேசத்தைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Related Articles

Latest Articles