பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க ஆலோசித்திருப்பதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தில் 195 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் கோவிட் 19 தொற்று இல்லையென்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தற்போதைய நிலையில் 95 குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரையில், இப் பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 10 வயது நிரம்பிய மாணவியொருவரும், 07 வயது நிரம்பிய மாணவரொருவரும் உள்ளடங்கியுள்ளனர்.
கொழும்பில் கட்டிட நிருமாணப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் விடுமுறையில் தமது இருப்பிடமான கனவரல்லைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே, இப் பிரதேசத்தில் கொரோனா தொற்று இந்தளவில் 11 பேர் வரையில் உயர்ந்துள்ளது.
இத்தொற்று மேலும் பரவாத வகையில் சுகாதார நடைமுறைகள் முறையாகவும், கிரமமாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்கள் இதனை ஆர்வமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தை படிப்படியாக விடுவிக்கவும் ஆலோசித்து வருகின்றோம்” என்றும் கூறினார்.
எம்.செல்வராஜா, பதுளை










