முட்டை புதியதா? பழையதா? எப்படி அறிந்து கொள்வது ?

முட்டை பெரும்பாலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு பொருள் ஆகும்.

ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர் தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும் கோலின் போன்ற நோய்களை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைந்திருக்கிறது.

இருப்பினும் முட்டை சாப்பிடுவதற்கு முன் அது நல்ல முட்டையா? கெட்டுப்போன முட்டையா? என்று பார்த்து சாப்பிடுவது அவசியமாகும்.

அந்தவகையில் முட்டை எது புதியது, பழையது? எது கெட்டுப்போன முட்டை என்று எப்படி பார்ப்பது என தெரிந்து கொள்வோம்.

எப்படி அறியலாம்?

கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை.

டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகி விட்டது என்று அர்த்தம். நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தால் 2 அல்லது 3 வாரம் பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது.

ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

கெட்டுப்போன முட்டையை எப்படி கண்டறிவது?

முட்டையை காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.

முட்டையை உடைத்து பார்க்கும்போது வெள்ளைக்கரு நிறம் வெள்ளை நிறமாக இல்லாமல் மங்கி போய் இருந்தால் அந்த முட்டையும் கெட்டுப்போனதுதான்.

மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தாலும் அது கெட்டுப்போன முட்டையாகும்.

கெட்டுப்போன முட்டையை சாப்பிடுவதனால் என்ன நடக்கும்?

கெட்டுப்போன அந்த முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும்.

அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

Paid Ad