முதன்முறையாக சங்கமிக்கும் வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, திடீரென விலகியதால் அவருக்கு பதில் கிஷோர் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவரும் விலகியதால், அந்தக் கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதற்காக அவருக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்.

முதலில் ‘வடசென்னை’ படத்திலேயே விஜய் சேதுபதி – வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. பின்னர், அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறிப்பிடத்தக்கது.

Paid Ad