ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக பிரதான கட்சிகளையெல்லாம் பிளவுபடுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியிலும் கைவைத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமார், ரணில் விக்கிரமசிங்க பக்கம் நேற்று தாவியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தொலைபேசி சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் களமிறங்கிய வேலுகுமார் சபைக்கு தெரிவானார்.
1994 ஆம் ஆண்டுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டிலேயே கண்டி மாவட்டத்துக்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது. 2019 தேர்தலிலும் வேலுகுமார் வெற்றிபெற்றார். கண்டி மாவட்டத்தில் இரு தடவைகள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த முதல் தமிழ் எம்.பி. இவராவார்.










