ஹெட்டன் மேபீல்ட் தோட்டத்தின் ஒரு பிரிவு சாமஸ்.செல்வ செழிப்பான ஊர். இந்த ஊருக்கு செல்வகந்தை என்ற தமிழ் பெயரும் உண்டு.இங்கு முத்து மாரியம்மனுக்கும் விநாயகப்பெருமானுக்கும் தனி,தனியே பெரிய ஆலயங்கள் உண்டு.இவற்றுக்கிடையே கறுப்புசாமி,ரோதமுனி,வாள்முனி, காளி,மருதைவீரன் போன்ற காவல் தெய்வங்களும் உண்டு. அவற்றில் மருதை வீரனுக்கு தனி சிறப்புண்டு.
சாமஸ் தோட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய காவலானாகவும் இந்த மக்களின் பல்வேறு வேண்டுதல்களை நிவர்த்திப்பவராகவும் மருதை வீரன் இருப்பது மட்டுமன்றி பலரின் குல தெய்வ வழிபிடகவும் மருதை வீரன் சுவாமி விளங்குகின்றார்.
மருதை வீரன் கோவில் சாமஸ் தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதையில் இடதுபக்கமாக உள்ள மலையடிவாரத்தில் மலையில் இருந்து ஊற்றெடுத்து ஓடி வரும் நீரோடைக்கு அருகில் வானை முட்டும் மரங்கள் சூழ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது.
இங்கு மதுரை வீரன் குதிரை வாகனத்தில் வெள்ளையம்மா,பொம்மியம்மா உடன் சமேதராய் அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் உள்ளே கல்லிலான பதிவு ஒன்றும் வேல்,சூலாயுதம் ,ஈட்டி என்பனவும் குதிரையின் பக்கத்தில் மதுரை வீரனின் காவலுக்கு துணைபுரிந்ததாக கருதப்படும் நாய் உருவம் ஒன்றும் உள்ளது.
இந்த ஆலயம் நமது மக்கள் இந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும் அன்று தொடக்கம் இந்த தோட்ட மக்களால் வழிபடப்பட்டு வருவதாகவும் இந்த ஆலயத்தில் தற்போது பூசை வழிபாடுகளை மேற்கொண்டு வரும்
அறுபது வயதான நல்லு மாணிக்கவாசகம் என்பவர் குறிப்பிடுகிறார்.
இவருக்கும் பக்கபலமாக இவருடைய மருமகன் ஜெயகாந்த் திவாகர் என்ற இருபத்தொன்பது வயதான இளைஞர் இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரோடு தோட்டத்தில் உள்ள சாமஸ் சமூகநல மன்றத்தின் பங்களிப்பும் இளைஞர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.
ஆரம்ப காலங்களில் அமரர் சிவனடியான் சின்னையா என்பவரே இந்த ஆலயத்தை அமைக்க இதற்கான பதிவுகளை வைத்ததாகவும் இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்து வந்ததாகவும் அறியமுடிகிறது இவரின் வழித்தோன்றல்களே இந்த ஆலயத்தை தோட்ட மக்களின் பங்களிப்போடு நிர்வகித்து வருகின்றனர்.
மதுரைவீரன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் விளக்கிட்டு கற்பூரம் ஏற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் விசேட நேர்த்தி பூசைகள் இடம்பெறும்.
மதுரைவீரசுவாமிகளுக்கு வருடாந்தம் ஆடிமாதம் இரண்டு நாள் திருவிழா எடுக்கின்றனர் முதல்நாள் முகூர்தக்கால் ஊன்றி, சாமி அழைத்து, குறுப்பெடுத்து,
நள்ளிரவிலே விசேட பூசைகள் இடம்பெறும். மறுநாள் தப்பு, உடுக்கிசைத்து பெரிய பூசைகள் இடம்பெறு அன்னதானம் வழங்கப்படும்.
சாமஸ் தோட்ட மக்கள் மட்டுமன்றி இதனோடு சேர்ந்த மேபீல்ட்,லொக்கீல்,பிட்டவீன் போன்ற தோட்டங்களை சேர்ந்த மக்களும் இந்த ஆலய வழிபாடுகளில் கலந்து சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரைவீரன் தமிழ் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிப்பவர் பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரனோடு அவருடைய இரு மனைவியரைம் சேர்த்தே பக்தர்கள் வழிபடுவர்.இவர் வீரத்திற்கும் காதலுக்கும் அடையாளமாக இருப்பவர்.
எழுத்து அ.ரெ.அருட்செல்வம்.