இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு – குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (மொட்டு) , நாளை (02) ஆறாவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
இவ்வாறு குறுகிய காலத்துக்குள் அரியணையேறிய அந்த கட்சி, குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே கடும் மக்கள் எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது. அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த விடயத்தை பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.
மறுபுறத்தில் அரச கூட்டுக்குள் குழப்பங்கள் தலைவிரித்தாடுகின்றன. பங்காளிக்கட்சிகளும் அரசியல் சமருக்கு தயாராகிவிட்டன. மொட்டு கட்சிக்கு நேசக்கரம் நீட்டிய தேசியவாத அமைப்புகளும் தனிவழி பயணம் குறித்து கவனம் செலுத்திவருகின்றன.
இதனால் வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த கையோடு தெற்கு அரசியல் களத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் தரமான – சிறப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறக்கூடும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன.

ஒரு புறம் கொரோனா நெருக்கடி, மறுபுறத்தில் பொருளாதாரத் தலையிடி என நாலா புறங்களிலும் நிலைமை மோசமாகவே உள்ளதால், 6ஆவது ஆண்டென்பது மொட்டு கட்சிக்கு அக்கினிப்பரீட்சையாகவே அமையப்போகின்றது.
எனவே, சவால்களை எதிர்கொண்டு, தடைகளை தகர்த்து முன்னோக்கி பணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான அடித்தளம் ‘பட்ஜட்’ ஊடாக இடப்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
மொட்டு கட்சியின் உதயம்
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மண்கவ்வியதும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால் ஆட்சி அதிகாரத்தை இழந்த ராஜபக்ச தரப்புக்கு, கட்சி அதிகாரமும் கைநழுவிப்போனது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பஸில் ராஜபக்சவும் அமெரிக்கா பறந்துவிட்டார்.
நாடு திரும்பிய அவர் புதிய கட்சியை அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார் . இதன்பலமாக 2016 நவம்பர் 2ஆம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உதயமானது. மஹிந்த ராஜபக்ச உட்பட முக்கியமான தலைவர்கள் ஆரம்பத்தில் இக்கட்சியில் உறுப்புரிமையை பெறவில்லை. எம்.பி. பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கினர்.
பெயரளவில் பீரிஸ் தலைவராக செயற்பட்டார். பொதுச்செயலாளர் பதவி சாகர காரியவசத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் கூட்டு எதிரணியில் இருந்தவர்கள் கட்டங்கட்டமாக மொட்டு கட்சியில் இணைந்தனர். உறுப்புரிமையை பெற்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் மொட்டு கட்சி தனித்து போட்டியிட்டது. (முதல் தேர்தல்) 44.65 வீத வாக்குகளைப் பெற்று 231 உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து மொட்டு கட்சிக்கான மவுசு எகிறியது. மைத்திரி பக்கம் இருந்தவர்களும் மஹிந்த பக்கம் தாவ ஆரம்பித்தனர். புதிய கட்சி ஆரம்பித்தால் வீதியில் அழையவேண்டிவரும் என ராஜபக்ச தரப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்த மைத்திரி, 2018 இல் ஜனநாயக விரோத வழியில் மஹிந்தவை பிரதமராக்கி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி செய்தார். எனினும், அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எழுச்சி கண்ட மொட்டு கட்சிக்கு, இது ஒரு கறுப்பு புள்ளியாக அமைந்தது.
2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். சுதந்திரக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் மொட்டுடன் இணைந்து கூட்டணி அமைத்தன. ‘வெற்றிலை’ சின்னத்தில் போட்டியிடுமாறு சு.க. விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மொட்டு சின்னத்திலேயே கோட்டா போட்டியிட்டார்.69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச, வெற்றிபெற்றதும் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகினார். இதனையடுத்து மொட்டு கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து 1951 ஆம் ஆண்டு வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1952 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார்.
1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது.
அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு வளர்ச்சி கண்டது. அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார். சுதந்திரக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதுவே அரசியல் சாதனையாக பார்க்கப்பட்டுவந்தது.
எனினும், மொட்டு கட்சி உதயமாகி மூன்றரை வருடங்களுக்குள்ளேயே அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 1946 இல் உதயமான ஐக்கிய தேசியக்கட்சி 47 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. எனினும், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் உதயமான கட்சிகளில் குறுகிய காலப்பகுதிக்குள் ஆட்சியை பிடித்த கட்சி என்ற பெருமை மொட்டு கட்சியையே சாரும்.
அதன்பின்னர் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களை வென்றது. பங்காளிக்கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றது. விகிதாசார தேர்தல் முறைமையின்கீழ் கட்சியொன்று பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகின்றது.
அன்று மொட்டு கட்சிக்கு ஆதரவு அலை வலுத்தியிருந்தது. இன்று எதிர்ப்பலை உருவாகியுள்ளது. பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். (அந்த 69 லட்சம் பேரும்தான்) உரப்பிரச்சினையால் விவசாயிகளும் பொங்கியெழுந்து போராடிவருகின்றனர். எனவே, தேர்தலொன்று நடத்தப்படுமானால் அரசுக்கான ஆதரவு எந்த மட்டத்தில் உள்ளது என்பதை அறியலாம்.
மொட்டு கட்சிக்கு இந்த 6ஆவது ஆண்டென்பது அனைத்து வழிகளிலுமே முக்கியத்தும் பெறுகின்றது. அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஆண்டமாகவும் அமையப்போகின்றது.
ஆர்.சனத்
