யாழில் ஆலயங்களில் அதிக ஒலி எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை

யாழில் ஆலயங்களில் அதிக ஒலி
எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை

– மாவட்ட செயலர் பிரதீபன் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்குத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

அதனால் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது, மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே, இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது குறித்து எழுத்து மூலம் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பில் முறைப்பாடுகளைப் பிரதேச செயலகங்களுக்கு அறிவித்தால், பிரதேச செயலர்கள் உடனடியாகப் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்து அந்த ஒலியின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.” – என்றார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது ஆலயத் திருவிழாக் காலங்கள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles