யாழ்ப்பாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் குறித்து, உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் இடைக்கால செயலகப் பிரதிநிதிகள், யாழ் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) சிறி மோகனனைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் வனப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகள், வேறு காரணங்களுக்காக அரசு வசமுள்ள தனியார் காணிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் இடைக்கால செயலகப் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இந்த முறைப்பாடுகள் குறித்தும், தற்போதைய காணி நிலவரம் குறித்தும் இடைக்கால செலயகப் பிரதிநிதிகள், மேலதிக மாவட்ட செயலாளரிடம் விரிவாக கேட்டறிந்தனர்.
காணி விவகாரத்தில் பொதுமக்களின் சந்தேகங்கள், கேள்விகள் ஆகியவை குறித்தும் யாழ் மேலதிக மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு இடைக்கால செயலகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவங்ச இதன்போது கொண்டுவந்தார்.
இதுகுறித்து யாழ் மேலதிக மாவட்ட செயலாளரிடமுள்ள காணி விடயங்கள், தரவுகள் குறித்தும் இடைக்கால செயலக அதிகாரிகள் கேட்டறிந்தனர். அத்துடன், காணிப் பிரச்சினைகள் குறித்தும், இதற்கான தீர்வுகள் குறித்தும் மேலதிக செயலாளரின் கருத்துக்களையும் சிபாரிசுகளையும், ஆணைக்குழுவிற்கான சிபாரிசுகளில் உள்ளடக்குவதாக இடைக்கால செயலகப் பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவங்சவுடன் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று அதிகாரி மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அதிகாரி அஸ்வினி அப்பங்கம, செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் கலாநிதி தங்கராஜா, பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.