யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கு புலிகளின் சீருடையா? மேயர் விளக்கம்

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கிய விடையத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளர் மற்றும், கண்காணிப்பு காவலர்களுக்கு காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

நேற்றையதினம் நாங்கள் யாழ் மாநகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக எங்களுடைய மாநகர சபை ஊழியர்களை ஒரு பணிக்காக அமர்த்தியிருந்தோம்.

அது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஊடாக அதனை மக்களுக்கு கூறியிருந்தோம். உன்மையிலே யாழ் மாநகரத்தை அசிங்கப்படுத்துகின்ற, குப்பைகளை வீசியெறிகின்ற, கட்ட இடங்களில் வெற்றிலை துப்புகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதர்க்காக யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் ஊடாக எவ்வளவு ரூபா தண்டப்பணமாக அறவிடுவது என்பதை வர்த்தமாணியில் அறிவித்து அந்த வர்த்தமாணி பிரசுரம் வெளியாகிய பின்னர் நாங்கள் எங்களுடைய வழமையான செயற்பாட்டில் ஒன்றாக விசேடமாக சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ஊழியர்களும் சபையில் ஊழியர்களாக செயற்பட்டவர்களே அவர்களையே இந்த விசேட பணிக்கு நாங்கள் நியமித்திருந்தோம்.

அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மக்கள் அவர்களை இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலும், அவர்களுக்கு வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை ஒன்றையும் அறிமுகப்படுத்தி வழங்கியிருந்தோம்.

இந்த சீருடை எதை பார்த்து நாங்கள் செய்தோம் என்றால் கொழும்பு மாநகர சபையில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான். கொழும்பு மாநகர சபை பின்பற்றுகின்ற, பாவிக்கின்ற சீருடையையே நாங்களும் இந்த ஊழியர்களுக்கு வழங்குவதென யோசித்து அதே மாதிரியான சீருடையை வழங்கியிருந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ எங்களுக்கு இருக்கவில்லை.

சிலர் இதனை சொல்லுகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடை போன்று இருப்பதாக என்னை பொறுத்தவரை சில இடங்களில் அது பொருந்தியிருக்கலாம் ஆனால் நாங்கள் கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே இதனை செய்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.

Paid Ad