ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், எனவே, அந்த வெற்றியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களும் பங்காளிகளாக வேண்டும் என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கை மூன்று தடவைகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தவேளைகளில் நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீட்டுள்ளார். அத்தகைய அனுபவமுள்ள – ஆற்றல் உள்ள தலைமை கிடைக்கப்பெற்றுள்ளமை நாட்டுக்கு கிடைத்துள்ள நன்மையாகும். எனவே, நாட்டை மேலும் ஐந்தாண்டுள் ஆள்வதற்குரிய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போதைய கருத்துகணிப்புகளில் எல்லாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்னிலையில் இருக்கின்றார். எனவே, அவரின் வெற்றியில் தமிழ் மக்களும் நிச்சயம் பங்காளிகளாக வேண்டும். எமக்கு கிடைத்துள்ள இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்திவிடக்கூடாது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் பல தடவைகள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சென்றுவிட்டார். அனைத்து மக்களும் இலங்கையர்கள்தான், எவருக்கும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்ற எண்ணம் உள்ள ஒரே தலைவர் அவர்தான். சிலர் கூறுவதுபோல அவர் இனவாதியோ மதவாதியோ கிடையாது. அவரின் ஆட்சியில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் உள்ளனர். தமிழர் ஒருவர் ஆளுநராக இருக்கின்றார். எனவே, இனவாதி எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.” – என்றார்.