கட்சி குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல. எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவேன் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டை மீட்டெடுத்த , சிறந்த வேலைத்திட்டம் உடைய, வாய்ச்சொல் வீரர் அல்லாத சிறந்த தலைவருக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவேன். எனவே, நாட்டு மக்களும் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் முடிவையே எடுப்பார்கள் என நம்புகின்றேன்.
கட்சி பேதமின்றி இலங்கை பற்றி சிந்தித்து மக்கள் வாக்களித்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெறுவார். இது கட்சி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல. தற்போது நாடு பற்றியே சிந்திக்க வேண்டும். தனிப்பட்டவர்களின் நலன் பற்றி சிந்திக்ககூடாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது நாமல், சாகர காரியவசம் போன்றோருக்கு உரித்தானது அல்ல. அது பலமான அமைப்பு. கூட்டு முடிவுகளே எடுக்கப்பட வேண்டும்.’’ – என்றார்.