ரணில் – சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, சிரேஷ்ட உப தலைவர் சாகல ரத்நாயக்க , ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்று, வாழ்த்து கூறினர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுவார்த்தை வெற்றியை நோக்கி பயணிப்பதை இன்றைய நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

சஜித்தின் பிறந்தநாள் நிகழ்வில் ஐதேக பிரதிநிதிகள் பங்கேற்றமை இரு தரப்பு இணைவுக்கான இறுதியான – உறுதியான சமிக்ஞையென தெரியவருகின்றது.

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

சஜித்துடன் இணைந்து செயல்பட தயார் என்பதையே ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கான பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார் என ஐதேக ஆதவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles