ரஷ்யாவுடன் பேசுங்கள் – அரசுக்கு விமல் ஆலோசனை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தங்கியிருக்காமல் ரஷ்யா போன்ற எமக்கு உதவ முன் வரும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரஷ்யா போன்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை ஒத்திப் போடாமல் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்த அவர், இருநாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் தொலைபேசி மூலம் உரையாடல்கள் நடத்தப்பட்டு எமது குழுவொன்று அங்கு அனுப்பப்பட வேண்டும் என்பதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

 

மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மாமேற்குலக நாடுகளித்திரம் கட்டுப்பட்டு எமது பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முற்பட வேண்டாமென குறிப்பிட்ட அவர், ரஷ்யாவுடன் மேற்கொண்டுவரும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை எமது வர்த்தக திணைக்களம் ஒத்திப் போட்டுள்ளமையால் நாட்டுக்கான நன்மைகள் கிடைக்காமல் போகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் உடனடியாக ரஷ்யாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய விமல் வீரவன்ச எம்.பி தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா எமக்கு தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டு்ள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் நிவாரண அடிப்படையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வது தொடர்பாக எம்மோடு இணைந்துள்ள கட்சித்தலைவர்கள் ரஷ்ய தூதுவரை சந்தித்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அந்த சந்திப்பின் போது ரஷ்ய தூதுவர், இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் என்றாலும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் இலங்கையின் வணிக திணைக்களம் குறித்த ஒப்பந்தத்தை தற்போது மேற்கொள்ள முடியாது எனவும் வேறு ஒரு திகதிக்கு ஒத்திப்போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு சம்பிரதாயமாக இடம்பெற்றுவரும் இலங்கை – ரஷ்ய வணிக ஒப்பந்தம் இடம்பெற்றிருந்தால், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அதன் மூலம் உதவிளைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ரஷ்யாவின் விமானம் ஒன்றை தடுத்து நிறுத்தியமை தொடர்பாக ரஷ்யாவுக்கு எமது நாடு மீதான மனத்தாங்கல் உள்ளது. குறித்த விவகாரத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் சுற்றுலாப் பயணிகளில் 50வீதமானவர்கள் வேறு நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களிலேயே பயணிப்பதாக ரஷ்ய தூதுவர் எம்மிடம் தெரிவித்தார்.

அந்த விமான சேவையை தொடர்ந்தும் மேற்கொள்வதானால் இலங்கையிலிருந்து அது தொடர்பில் உறுதியான சான்றிதழ் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று ரஷ்யாவுடன் இடம்பெற்ற முரண்பாடான சம்பவம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி அந்த நாட்டு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி எமது நாட்டின் தேவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

உயர்மட்ட தூதுக்குழு ஒன்றையும் அங்கு அனுப்புவதன் மூலமே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரஷ்ய தூதுவர் எம்மிடம் தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சில சட்ட திட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டாலும் மனுதாபிமான உதவி என்ற அடிப்படையில் அதுதொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

வேறு நாடுகள் ஒந்தங்களை செய்து உதவிகளை பெறும்போது நாம் ஏன் அதனை மேற்கொள்ளவில்லை என நான் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசிடம் கேட்டபோது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் பதிலளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி, உதவி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடாமல் இருந்தால் எப்படி பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்? என்றும் அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles