ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூண்டுள்ள நிலையில், இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்படும் தாக்கம், ரஷ்யாவில் உள்ள இலங்கையர்களின் நிலைவரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதேவேளை, ரஷ்யா, உக்ரைன் விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சியொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில், உக்ரைன் ஜனாதிபதியின் அணுகுமுறைகளை ரணில் விக்கிரமசிங்க சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்கொரியா தூதுவர்களுடனும் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சீனத் தூதரக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.
ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையால், ஆசியா எழுச்சி பெறுவதற்குள்ள வாய்ப்புகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
