மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளிடம் தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்காக இதொகாவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தின் பின்னர் இதொ.கா தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ,தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவை சந்தித்து பேச்சு நடத்தினர்.
தொழில் அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது , அமைச்சரிடம் இதொகாவினர் மகஜரொன்றை கையளித்தனர்.
குறித்த மகஜரில், “ தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமான 1700 ரூபா வழங்கப்பட வேண்டும், இது வரைக்காலமும் வழங்கப்பட்டுவந்த அனைத்துவிதமான சலுகைகளையும் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனுச நானயக்கார, இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
1700 ரூபா நாளாந்த வேதனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.