800 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குருணாகல் பகுதியில் நடத்திச் சென்ற பிரமிட் நிதி நிறுவனம் ஊடாக வைப்பாளர்களின் நிதியை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலைச் சேர்ந்த 52 வயதான தம்மிக ரணசிங்க எனும் சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 2022ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை அவமதித்து நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து நேற்று (08) அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
சந்தேகநபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை அழைத்துச் செல்வதற்காக வருகைதந்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரமிட் நிதி நிறுவனம் ஊடாக 2,500 வைப்பாளர்களின் நிதியை சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.