“14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால், தோட்ட லயன் குடியிருப்பு கையகப்படுத்தப்படும், தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளமை மலையக மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இக்கடிதத்தை உடன் மீள பெறுவதற்குரிய உத்தரவை ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும்.” – என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.
தோழர்கள் எனக் கூறிக்கொண்டு தேசிய மக்களுக்கு வாக்குகளை சேகரித்துக்கொடுத்த, தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போது காணாமல்போயுள்ளனர். எனவே, மக்களுக்கு பிரச்சினைவரும்போது அவர்களை கைவிட்டு செல்பவர்கள் எவ்வாறு சமூக மாற்றத்துக்கு பங்களிப்பு வழங்குவார்கள் எனவும் வேலுகுமார் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“ அரச பெருந்தோட்ட யாக்கமென்பது, அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள பெருந்தோட்டமாகும். அந்நிறுவனத்தால் கண்டி மாவட்டத்துக்குட்பட்ட உன்னஸ்கிரிய பகுதியிலுள்ள தொழிலாளர்களுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால் தோட்ட லயன் சட்டப்பூர்வமாக கையகப்படுத்தப்படும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்தபோது பெருந்தோட்ட மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு தொடர்பில் கோஷங்களை எழுப்பிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்படியொரு கடிதம் வெளியாகியுள்ளமை வேதனையளிக்கின்றது. அவர்களின் இரட்டை முகத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட மக்கள்மீது உண்மையான அக்கறை இருந்தால் இக்கடிதத்தை மீளப்பெறுவதற்குரிய உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடன் பிறப்பிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் தோழர்கள் எனக் கூறிக்கொண்டு தோட்டப் பகுதிகளுக்கு வந்தவர்கள் இது தொடர்பில் கூறுவது என்ன? அவர்களுள் பலர் தற்போது காணாமல்போயுள்ளனர். மக்கள் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால்கூட தொடர்பில் வருவதில்லையாம்.
இப்படியானவர்கள்தான் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களாம். எனவே, இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழும் வகையில் கண்டி மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்கள் முடிவுகளை எடுக்கக்கூடாது. எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இவ்வாறு அநீதிகள் இழைக்கப்படும்போது அதனை எம்மால் சுட்டிக்காட்ட முடியும். எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த சான்றாகும்.
லயன் அறைகளை கையகப்படுத்தினால் அங்கு வாழ்ந்த மக்கள் எங்கு செல்வார்கள்? சிலவேளை மலையக மக்கள் இந்தியாவுக்கே சென்றுவிடுங்கள் என்ற மறைமுக செய்தியை இதன்மூலம் சொல்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆரம்பகாலகட்டத்தில் இந்திய எதிர்ப்பு கொள்கையில் இருந்த ஜே.வி.பி., இந்திய வம்சாவளி மக்களையும் சந்தேக கண்ணோட்டத்துடனேயே பார்த்தது என்ற கொடூமையான வரலாறும் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, மாற்றம், மாற்றம் எனக் கூறிக்கொண்டு தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் சில சமூகவலைத்தள போராளிகள், இப்படியான சம்பவங்கள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது நல்லது.” -என்றார்.
DD
