நிதி தரப்படுத்தல் நிறுவனங்களைக் கூட புறக்கணித்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
” நாடு வங்குரோத்தடைந்து இக்கட்டான கட்டத்தில் உள்ளது. வங்குரோத்து நிலை என்பது கடனை திரும்பச் செலுத்த முடியாமல் இருக்கும் நிலையாகும். இருதரப்பு, பலதரப்பு மற்றும் இறையாண்மைப் பத்திரங்கள் போன்ற கடன் வகைகளில் கடன்களை திருப்பிச் செலுத்துவதும் முறையை சுட்டிகிறது.
இந்த நிறுவனங்கள் ஒருநாடு கடன் பெற்றால் அதனை எவ்வாறு மீள் செலுத்தும் என்பது தொடர்பான குறிகாட்டிகளை வெளியிடும். இந்த நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் நாடுகள் கடன்பெற முடியுமா? அவற்றை மீள் செலுத்தும் ஆற்றல்கள் உள்ளனவா? என்பது குறித்த குறிகாட்டிகளை வெளியிடுகின்றன.
குறித்த நாட்டின் நிறுவனங்கள் வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களைக்கொண்டே இந்த குறிகாட்டிகள் வெளியாகும். கடன் திருப்பிச் செலுத்தும் முறைமை உருவாக்கப்பட்டு வந்தால், சர்வதேச தரவரிசை நிறுவனங்கள் (Fitch, Moody’s, மற்றும் standard and poor’s) அதை அடையாளம் காணும். எமது நாடு கடனை செலுத்தும் முறைக்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை. நிதி தரவுகள் பயன்படுத்தப்பட்டு, நாடு வங்குரோத்தடைந்து விட்டதா இல்லையா என்பது குறித்த தகவல்களை தரப்படுத்தல் நிறுவனங்கள் வெளியிடும்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றிய பின்னர், பெறுபேறுகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பரீட்சார்த்திகளால் அல்லாது பரீட்சை திணைக்களத்தினாலயே வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நாம் வங்குரோத்தடைந்து விட்டோமா இல்லையா என்பதை எமது நாட்டின் ஆட்சியாளர்களால் தீர்மானிக்க முடியாது. நாட்டின் நிதித் திறனை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் எடுக்கப்படும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இது அமைகிறது. சில தரவரிசைகளின்படி எமது நாடு இன்னும் அந்நிலையை எட்டவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை ஏமாத்துவது இந்நாட்டின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். வங்குரோத்தான நாட்டின் மக்கள் தகவல் மற்றும் தரவுகளில் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரநிலைக்கு ஏற்ப சர்வதேச நிதி மதிப்பீட்டு நிறுவனங்களால் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில் இருந்து தப்பித்து விட்டோம் போன்ற முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பது நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இது மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாடு வெளிநாட்டுக் கடனைக் குறைக்கும், அந்நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒரு வேலைத்திட்டத்தில் பிரவேசித்துள்ளது. எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கடன் நிவாரணம் எமது நாட்டுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், இதைவிடுத்து தனி நபர் அல்லது குழுக்களின் தனிப்பட்ட தேவைகளை அடிப்படையாக கொண்டு, தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு நன்மை பயக்கும் உடன்படிக்கைகளில் ஈடுபடுவது எமது நாட்டுக்கு பெற முடியுமான கடன் நிவாரணத்தை இழக்கும் நடவடிக்கையாகும். இது தேச துரோகத்தை வெளிப்படுத்தும் செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.