‘வடக்கின் சமர்’ – யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி!

117 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் யாழ். மத்தி (157) மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி (228) ஆகியவற்றின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டங்களைத் தொடர்ந்து, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது 140 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

தொடர்ந்து இன்று (09) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை விட 69 ஓட்டங்கள் முன்னிலை அடைந்தவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி சற்று சவால்மிக்க முன்னிலை ஒன்றை எதிரணிக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்த போதிலும் அவ்வணி 57.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.

யாழ். மத்திய கல்லூரி அணியின் பின்வரிசை துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக விக்னேஸ்வரன் பருதி 20 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அதேவேளை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கிருபானந்தன் கஜகர்ணன், ஜெயச்சந்திரன் அஷ்னாத் மற்றும் ஸ்டான்லி சேம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 79 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களுடன் அடைந்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றி இலக்கை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய உதயனன் அபிஜோய்சாந்த் 10 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் அன்டர்சன் சச்சின் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் சென். ஜோன்ஸ் கல்லூரியின் உதயனன் அபிஜோய்சாந்த் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles