வடக்கில் பௌத்த அடையாளங்கள் அழிப்பு: சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

” வடக்கு, கிழக்கில் தாயக கோட்பாட்டை நிராகரிப்பதற்கு இருக்கும் ஒரே சாட்சிதான் பௌத்த சின்னங்கள். அதனால்தான் அவற்றை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் அழித்துவருகின்றனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  வடக்கு, கிழக்கில் குறிப்பாக வடக்கில் தாயக கோட்பாட்டை நிராகரிப்பதற்கு இருக்கும் ஒரே சாட்சிதான் பௌத்த சின்னங்கள்: அடையாளங்கள். அதனால்தான் வடக்கிலுள்ள பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழித்து, அதற்கு மேல் கோவில்களை அமைத்து, அங்கு பழைய கோவில்கள் இருந்தன எனக் கூறிவருகின்றனர்.

இலங்கையென்பது பௌத்த நாடாகும்.  திஸ்ஸ விகாரையில் திறப்பு விழாவொன்றை நடத்த முடியவில்லையெனில், தமிழர்கள் கூச்சலிடுகின்றனர் என்பதற்காக பிக்குகளுக்கு தானம் வழங்க முடியவில்லையெனில் என்ன நியாயம்?  தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புத்த சாசனம் பாதுகாக்கப்படவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

அதேவேளை இலங்கையில் தேசிய கீதம் இரு மொழிகளில் இசைக்கப்படுகின்றது. இது பெரும் தவறாகும். அரசியலமைப்பை மீறும் செயலாகும். இந்தியாவில் எத்தனை மொழிகள் உள்ளன. ஆனால் பெங்காலி  மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. அனைத்து மொழிகள் பேசுபவர்களும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது உணர்வுபூர்வமாக இருப்பார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles