வாகனங்களை வாடகைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட பசறை பகுதியை சேர்ந்த இருவர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்.

பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடிசெய்த இரு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் தற்போது சேவையில் உள்ளவர் எனவும் மற்றையவர் சேவையில் இருந்து தப்பியோடியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பசறை பிபிலேகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும், பசறை எல்ல, வெலிமடை போன்ற பகுதிகளில் பலரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வான்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வாகனங்களுக்கான வாடகையை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தவறாது நேர்மையாக செலுத்தி வந்துள்ளனர்.

அதன் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு குறித்த நபர்களிடமிருந்து வாடகை பணம் கிடைப்பதில்லை எனவும் அது தொடர்பில் விசாரிக்க அவர்களது கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட போது அவர்களது கைபேசி இலக்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பதுளை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பண்டாரவளை, தியத்தலாவ பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் வாகனங்களை வேறு தரப்பினரிடம் அடகு வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடகு வைக்கப்பட்ட 06 மோட்டார் சைக்கிள்கள், 03 முச்சக்கரவண்டிகள் மற்றும் 02 வான்கள் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இந்த வாகனங்களை வாடகை அடிப்படையில் 2 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை அடகு வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு வாகனங்களை வாடகைக்கு வழங்கியவர்களில் பெரும்பாலானோர் இராணுவ ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இராணுவம், விமானப்படை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில், பதுளை மற்றும் பண்டாரவளை பொலிஸ் பிரிவுகள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles